நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 118 ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை வைக்கப்பட்டுள்ள 'நவீன இந்தியாவின் சிற்பி' ஜவஹர்லால் நேருவின் சிலைகளுக்கும், படங்களுக்கும் பொதுமக்கள் திரண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
குழந்தைகளை நேரு மிகவும் விரும்பிய காரணத்தால், அவரின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
எனவே, நாடு முழுவதும் பள்ளிகள், காப்பகங்கள், விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு இன்று காலை இனிப்புகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
புதுடெல்லி சாந்தி வனத்தில் உள்ள நேருவின் நினைவிடத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் கதராடை அணிந்து வந்து மரியாதை செலுத்தினர்.
குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி மாநில முதல்வர் ஷீலா தீக்ஷித், மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு பிரமுகர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது குழந்தைகள் மூவண்ண பலூன்களைப் பறக்கவிட்டனர். பள்ளிக் குழந்தைகள் நாட்டுப் பற்றுமிக்க பாடல்களைப் பாடினர்.
கடந்த 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்த ஜவஹர்வால் நேரு, தனது படிக்கும் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று தலைமைப் பீடத்திற்கு உயர்ந்தார். அவரின் பன்முகத் திறமைகள் நவீன இந்தியாவின் சிற்பி என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தன.
நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை இன்றும் குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' பாதுகாக்கப்பட வேண்டிய நூலாக உள்ளது.
இத்தகைய பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நேரு, கடந்த 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி தான் பிரதமராக இருக்கையில் மறைந்தார்.
சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேரு சிலைக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பரிதிஇளம்வழுதி, தா.மோ அன்பரசன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநிலங்களவை உறுப்பினர் ஞானதேசிகன், கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் கத்திப்பாரா ஜனார்த்தனன் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.