பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் நந்திகிராம், அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சனைகள் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் மத்திய அரசுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நந்திகிராம் விவகாரம்தான் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இருந்தாலும், நந்திகிராம் விவகாரத்தை பா.ஜ.க. எழுப்பினால் இடதுசாரிகள் நிச்சயமாக பதிலடி கொடுப்பார்கள். குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி இந்த விவாதத்தைக் கடுமையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அறிகுறியாக நந்திகிராமிற்குச் சென்ற பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, நந்திகிராம் விவகாரத்தை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று கூறியிருக்கிறார். அதற்கு மார்க்சிஸ்ட் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, கோதுமை இறக்குமதி, நெல்லுக்கு குறைந்தபட்ச விலை, விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.