அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு பேச்சு நடத்தலாம், ஆனால் அந்தப் பேச்சின் முடிவுகளை நிராகரிக்கும் உரிமையை தங்களுக்குக் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று இடதுசாரிகள் கூறியுள்ளனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூட்டணி - இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவின் 6-வது கூட்டம் வருகிற 16-ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால், அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டதால் அக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை உயர்மட்டக் குழுவின் தலைவரும், மத்திய அயலுறவு அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்தித்து, 16 -ஆம் தேதி மாலை 4 மணிக்கு கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவைத் தெரிவித்தார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
அந்தக் கூட்டத்தில், சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு பேச்சு நடத்தவதற்கு இடதுசாரிகள் தங்களின் அனுமதியைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பேச்சு விவரங்களைச் சரிபார்த்து திருத்துதல், பேச்சின் முடிவுகளை நிராகரித்தல் ஆகிய உரிமைகளைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இடதுசாரிகள் வைக்கவுள்ளனர்.
இடதுசாரிகள் ஆளும் மேற்குவங்கத்தில் உள்ள நந்திகிராமில் எழுந்துள்ள சிக்கலால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சரிவைச் சமாளிக்கவே, மத்திய அரசுடன் இடதுசாரிகள் ஒத்துப் போகின்றனர் என்று விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
ஆனால், அதை இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மறுத்துள்ளதுடன், வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஐ.மு. - இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்டத்தின்போது சுமூகமான முடிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நேற்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் உள்ளிட்ட மற்ற இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர்.