நந்திகிராமில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வன்முறைகளின் அடிப்படையில் மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
மேலும், நந்திகிராமில் நிலைமைகளை ஆய்வு செய்வதற்காகக் குழு ஒன்றை அனுப்பவும் மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது.
முன்னதாக, கோகுல் நகர், சோனாசுரா, கர்சக்ராபெரியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளை அடக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.
நந்திகிராம் உள்ளிட்ட கிழக்கு மிட்னாபூர் மாவட்டப் பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட முழுஅடைப்புப் போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைகள் கற்கள் வீசித் தாக்கப்பட்டன.
நிலைமை மோசமடைந்த காரணத்தால் அரசு உத்தரவின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இன்று மக்களின் எதிர்ப்பையும் மீறி நந்திகிராம் சென்றடைந்தனர். அவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.
பல்வேறு முக்கியச் சாலைகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் கற்களைக் குவித்து காவல்துறையினரின் வாகனங்களைத் தடுக்க முயற்சித்தனர்.
இதை உள்துறை செயலர் பி.ஆர்.ராய் உறுதிப்படுத்தியுள்ளார். நந்திகிராமில் சுமார் 100 மத்திய ரிசர்வ் காவல்படையினர் பணியில் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.