பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்கிருந்து தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்கும் வகையில் நமது எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அந்தோணி, ''பாகிஸ்தானில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் நிலைமை அமைதியாக உள்ளது'' என்றார்.
''அண்மையில் எல்லைகளில் சில இடங்களில் ஊடுருவல் அதிகரித்தது. இருந்தாலும் அவை விரைவில் கட்டுப்படுத்தப்பட்டன. தீவிரவாதிகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அந்நாட்டு உள் விவகாரம் என்று குறிப்பிட்ட அமைச்சர், அங்கு விரைவில் அமைதி திரும்பும் என்று இந்தியா நம்புகிறது என்று தெரிவித்தார்.