உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் புதிய நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஆப்தாப் ஆலம், ஜே.எம்.பஞ்சால் ஆகிய 3 பேருக்கும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் நீதிபதி சிங்வி ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்திலும், நீதிபதி அப்தாப் ஆலம் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்திலும், நீதிபதி பஞ்சால் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும் பணிபுரிந்து வந்தனர்.
இந்தப் புதிய நீதிபதிகளுடன் சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு இடம் காலியாக உள்ளது.
இதுவரை எந்தப் பெண் நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்படவில்லை. இருந்த ஒரே பெண் நீதிபதியான ருமாபால் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெற்றுவிட்டார்.
புதிய நீதிபதிகளில் சிங்வி, முதன் முதலில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் உள்ளாட்சி அமைப்புகள், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் சார்பாக தொடரப்பட்ட எல்லா வழக்குகளிலும் மாநில அரசின் சார்பாக ஆஜரானார்.
பின்னர் 1990ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
இறுதியாக கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி அப்தாப் ஆலம், கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.
இவர் தனது நீதிமன்றப் பணிக்காலத்தில் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி வரை பாட்னா உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் நிலைக் குழுவில் பணியாற்றியுள்ளார்.
பின்னர் கடந்த 1990 ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பாட்னா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி பஞ்சால், கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.