கர்நாடக மாநிலத்தின் 26வது முதலமைச்சராக பா.ஜ.கவைச் சேர்ந்த பி.எஸ். எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜகதீஷ் ஷெட்டர், வி.எஸ். ஆச்சார்யா, கோவிந்த கரஜோல், ஆர்.அசோக் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 20 மாதங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பா.ஜ.க.விடம் ஒப்படைக்க மதசார்பற்ற ஜனதாதளம் மறுத்துவிட்டது.
இதனால் அம்மாநில அரசியலில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பிறகு திடீர் திருப்பமாக பா.ஜ.க.விற்கு ஆதரவளிப்பதாக மதசார்பற்ற ஜனதாதளம் தெரிவித்ததை அடுத்து கர்நாடக அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது. அதனடிப்படையில், முன்னாள் முதல்வரும் தென்னிந்திய பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.எஸ் எடியூரப்பா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலச் சட்டபேரவையான விதான் செளதாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் எடியூரப்பாவிற்கு மாநில ஆளுநர் ராமேஸ்வர் தாகூர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜகதீஷ் ஷெட்டர், வி.எஸ்.ஆச்சார்யா, கோவிந்த கரஜோல், ஆர்.அசோக் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்கிடையில் மதசார்பற்ற ஜனதாதளத்தின் அமைச்சர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளத்தின் சட்டமன்றத் தலைவராக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சியமைத்ததன் மூலம் தென்னிந்தியாவில் முதல் முறையாக பா.ஜ.க காலூன்றியுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாகப் பா.ஜ.க தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கினர்.
எடியூரப்பா பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.