வடக்கு காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதில் லஷ்கர் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூரில் கடந்த 8 ஆம் தேதி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவத்தினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் ராணுவத்தினர் மிகவும் கவனத்துடன் தங்களின் நகர்வுகளை மேற்கொண்டனர். முதலில் நடைபெற்ற மோதலில் 5 பயங்கரவாதிகளும், 4 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். 12 வீடுகள் சேதமடைந்தன்.
இதையடுத்து பயங்கரவாதிகள் அருகில் உள்ள 16 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்குள் புகுந்து கொண்டனர். அங்கிருந்தபடி ராணுவத்தினரையும் பொதுமக்களையும் தாக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், இன்று அதிகாலை ராணுவத்தினர் தங்களின் தாக்குதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர். காலை 9.30 மணியளவில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பொதுமக்களின் சொத்துகளுக்கு அதிகம் சேதம் ஏற்படாத வகையில் நிதானமாக நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 6 ராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று ராணுவ உயரதிகாரி எம்.எஸ்.குப்தா தெரிவித்தார்.
அதேநேரத்தில் பயங்கரவாதிகள் தப்பிவிட்டதாகவும், ராணுவத்தினர்தான் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கஸ்நவி உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.