நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அணுசக்தி மிகவும் அத்தியாவசியமானது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 42வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய முகர்ஜி, நமது நாட்டின் அதிவேக வளர்ச்சியே நமது முக்கியக் குறிக்கோள். சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரிவினரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவடைந்த தேசத்தை நாங்கள் விரும்புகின்றோம் என்றார்.
''நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அணுசக்தி மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் துரதிஷ்டவசமாக அணுசக்தித் தேவைக்கு அயல்நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் நம்மை வளர்ந்த நாடாக நிலைநிறுத்திக் கொள்ள வலிமைமிக்க பாதுகாப்புத் துறை இருந்தால் மட்டும் போதாது, பொருளாதார வளர்ச்சியும் அவசியம்.'' என்று முகர்ஜி கூறினார்.