ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிக்கு தங்குமிடம் கொடுத்த வாசியா சுல்தானா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மெக்கா மசூதியில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான வங்காள தேசத்தைச் சேர்ந்த மிர்ஸா உர் ரகுமான் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவர் ஹர்கத் உல் ஜகாதி இஸ்லாமி என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மிர்ஸா கொடுத்த தகவலின் பேரில் வாசியா சுல்தானா என்ற பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு வங்காள தேசத்திலிருந்து சட்டவிரோதமாகத் தப்பிவந்து ஹைதராபாத்தில் மதப்பள்ளி நடத்தி வந்தவர் சித்திக் உர் ரகுமான். இவரின் மனைவிதான் வாசியா.
சித்திக்கின் வற்புறுத்தலின் காரணமாகத்தான் மிர்ஸா தனது வீட்டில் தங்குவதற்கு வாசியா அனுமதி கொடுத்துள்ளார். வாசியா கைது செய்யப்படவுடன் சித்திக் தப்பிச் சென்றுவிட்டார். அவரைத் தேடி காவல்துறையினர் மும்பை விரைந்துள்ளனர்.