கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக ஏற்பட்டு பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதனால் எடியூரப்பா முதல்வராகிறார்.
கர்நாடகாவில் 20 மாத பதவி காலம் முடிவடைந்த பிறகு முதலமைச்சர் குமாரசாமி தனது பதவியை கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் ஆதரவை கைவிடப்படுவதாக பா.ஜனதா அறிவித்தது. இதை தொடர்ந்து குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. ஆட்சி நிர்வாகத்தை ஆளுநர் ராமேசுவர் தாகூர் ஏற்றார்.
இந்த நிலையில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக ஜனதா தளம் (எஸ்) கட்சி அறிவித்தது. இது தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த 129 உறுப்பினர்கள், ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தார்கள். ஆனால், கடிதம் கொடுத்து 10 நாட்கள் ஆகியும், பா.ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இது, பா.ஜனதா தலைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி கர்நாடகத்தில் பல்வேறு போராட்டங்களை பா.ஜனதா நடத்தியது. ஆட்சி அமைக்க அனுமதி வழங்கக்கோரி உறுப்பினர்கள் அனைவரும் நேற்று குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றனர். பா.ஜனதாவின் முன்னாள் துணை முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் 125 உறுப்பினர்கள் அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பில் பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையாநாயுடு, யஷ்வந்த் சின்கா, கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய வெங்கையா நாயுடு, ஆட்சி அமைக்க எங்களுக்கு மெஜாரிட்டி இருப்பதை குடியரசு தலைவரிடம் எடுத்து கூறினோம். அரசியல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார் என்று கூறினார்.
இதற்கிடையே டெல்லி சென்ற ஆளுநர் ராமேசுவர் தாகூர் நேற்று கர்நாடக நிலவரம் குறித்து தனது நிலையை சிவராஜ் பட்டீலிடம் விளக்கிய அவர், இது தொடர்பான இறுதிஅறிக்கையையும் வழங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விளக்கிக் கொள்ள அமைச்சரை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைகிறது. முன்னாள் துணை முதல்வர் எடியூரப்பா முதல்வர் ஆகிறார். அமைச்சரவையின் முடிவை தொடர்ந்து ஆளுநர் ராமேசுவர் தாகூர், எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். அதனைத் தொடர்ந்து பதவி ஏற்பு விழா அடுத்த ஒரு சில நாட்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.