Newsworld News National 0711 07 1071107050_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரழிவை உருவாக்கும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் : பிரதமர் எச்சரிக்கை!

Advertiesment
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் பிரதமர் மன்மோகன் சிங் 53வது ஆசிய-பசிபிக் நாடுகளின் மாநாடு

Webdunia

, புதன், 7 நவம்பர் 2007 (19:20 IST)
பேரழிவு உருவாவதற்கான காரணிகளை குறைப்பது தொடர்பான இரண்டு நாள் 53வது ஆசிய-பசிபிக் நாடுகளின் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், எல்லைகள் தாண்டி பேரழிவுகளை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளின் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை விடுத்தார்!

மனிதனால் நிகழ்த்தப்படும் பேரழிவு என்று பயங்கரவாதச் செயல்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ஆசிய-பசிபிக் மண்டலத்தில் பெரும்பாலான இடங்களில் உருவெடுத்துள்ள பயங்கரவாத செயல்களை பட்டியலிட்டார். மேலும் பயங்கரவாதிகள் தங்களின் நாசவேலைகளை எல்லைத் தாண்டி செயல்படுத்தும் நிலையில் உள்ளனர் என்ற கூறினார்.

இந்த தீவிரவாத செயல்களுக்கு எந்தவித அரசியல் எல்லைகளும் இல்லை. நாம் எல்லோருமே அவர்களின் இலக்குக்கு உட்பட்டவர்கள்தான் என்றும் மன்மோகன் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளின் இந்த நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், அவர்களை ஒழிக்கவும் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மிடையே நல்ல உறவு தேவை என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

பேரழிவை தடுக்க தேசிய அளவிலான கொள்கை, வழிமுறைகள் தேவை என்று கூறிய மன்மோகன் சிங், அண்மைக்காலமாக நிலநடுக்கம், புயல், சூறாவளி, வெள்ளம், சுனாமி ஆகிய இயற்கை சீற்றங்களால் ஆசியாவின் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இதனை எதிர்கொள்ளத் தேவையான தகுதியை அனைத்து நாடுகளும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள தேசிய அளவில் பலம் பொருந்தியவர்களாக இருந்தால் மட்டும் போதாது, இரு நாடுகளிடையேயான நல்லுறவு, மண்டல ஒத்துழைப்பும் நம்மிடம் உள்ள தகுதியை திறம்படச் செயல்படுத்தத் தேவையானதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

பேரழிவு சீற்றங்களை அடுத்து நடைபெறும் நிவாரணம், சீரமைப்பு, ஒத்துழைப்பு, முன்கூட்டியே பேரழிவை எச்சரிக்கும் அமைப்புகளை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும் நாம் அளிக்கும் மிகப்பெரிய ஒத்துழைப்பே அண்டை நாடுகளுடனான நமது நட்புறவை பறைசாற்றுவதாக அமையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பேரழிவை எதிர்கொள்ள தேசிய, மாநில அளவில் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், பேரழிவு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய புதிய வழிமுறைகளை தேசிய ஆணையம் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

இயற்கை சீற்றங்களுக்கான காப்பீடு மிகவும் குறைந்த அளவில்தான் இருப்பதாக கூறிய பிரதமர், இயற்கை சீற்றங்களை எதிர்நோக்கும் பகுதிகளுக்கான சிறப்பு காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நிதியமைப்புகள் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

புவி வெப்பமடைதல், பருவ நிலை மாற்றம் ஆகியவைதான் மிகப்பெரிய பேரழிவு என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், ஒரு நாட்டின் செயல்பாடு பிற நாடுகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

சுகாதாரத்தைப் பொறுத்தமட்டில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹெச்.ஐ.வி., பறவைக் காய்ச்சல் நோய் ஆகியவையும் தற்போது மிகப்பெரிய சவாலாக நம்முன் உள்ளது. அதனுடைய வளர்ச்சி சமூக, பொருளாதார நிலைகளில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று எச்சரித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil