இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே பொதுவான நோக்கு இருதரப்பு உறவை மேம்படுத்தும் என்று இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர் மெக்கிலேனி கேல்மேரே தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லி வந்த சுவிட்சர்லாந்து அதிபர் மெக்கிலேனி கேல்மேரேக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வரவேற்றனர். அவருக்கு அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த கேல்மேரே தேசப்பிதா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அவர் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 1995-2005 க்கு இடைப்பட்ட காலத்தில் இருதரப்பு வணிகம் இரண்டு மடங்காக உயர்ந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
சுவிஸ் அதிபர் ஹைதராபாத், ஆக்ரா ஆகிய இடங்களுக்கும் செல்கிறார். இரு நாடுகளிடையே நட்புறவு உருவாகி 60 ஆண்டுகள் 2008-ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் ரே-யின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வருங்காலங்களில் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், வளர்ச்சி தொடர்பான திட்டங்களில் இணைந்து செயலாற்ற ஆர்வமாக இருப்பதாக சுவிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செயல்படுத்தி வரும் நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களுக்கு புத்துணர்வு அளிக்கப்படும் என்று தெரிவித்தார், அதேபோன்று எரிசக்தி, வானிலை, சுற்றுச்சுழல் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படவும் விருப்பம் தெரிவித்தார். ரே-யின் இந்த விஜயம் அரசியல்வாதிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.