குழந்தையின் இடுப்புக்கு கீழே உடல் ஓட்டிய நிலையில் இருந்த இரண்டு கால், கைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 30 மருத்துவர்கள் கொண்டு குழுவினர் இதை வெற்றிகரமாக செய்தனர்.
பீகார்- நேபாளம் எல்லையை ஓட்டியுள்ள ராம்பூர் கிராமத்தை சேர்ந்த சாம்பு-பூனம் தம்பதிக்கு 2 ஆண்டுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் இடுப்புக்கு கீழே தலையில்லாத இன்னொரு குழந்தையின் உடல் ஒட்டிய நிலையில் இருந்தது. அதிலும் 2 கால்களும் 2 கைகளும் இருந்தன.
லட்சுமி என்று பெயரிடப்பட்ட இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூர் உள்ள பார்ஸ் என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர்கள் குழந்தையின் உடலில் ஒட்டி உள்ள பாதி உடலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிய 40 மணி நேரம் ஆகும் என்று மருத்துவர்கள் கணித்தனர். இதற்காக 30 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 2 கட்டமாக அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலில் ஒட்டி இருக்கும் உடல் உறுப்புகளை வெட்டிஎடுப்பது, அடுத்து மீதி உடலை ஒன்றிணைப்பது என்று முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மாலை வரை அறுவை சிகிச்சை நடத்தி ஒட்டின உடல் பாகங்களை வெட்டி எடுத்தனர். அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இன்று மீதி பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர்.
இது பற்றி மருத்துவமனை தலைவர் சரண் சிவ்ராஜ் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்று காலை 7 மணிக்கு நடந்த அறுவை சிகிச்சை இன்று காலை 10 மணிக்குத்தான் முடிந்தது. 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். குழந்தை நன்றாக இருக்கிறது என்றார்.