சேது சமுத்திரத் திட்டத்தைவைத்து நாட்டு மக்களை மோசடி செய்ய பா.ஜ.க முயற்சிசெய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாற்றியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று பிரச்சாரம் தொடங்கியது.
அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ''பா.ஜ.க வின் ஆட்சியில்தான் சேது சமுத்திரத் திட்டம் உருவாக்கப்பட்டது. ராமர் பாலம் இடிக்கப்படுவது பற்றி அப்போது அவர்கள் யோசிக்கவில்லையா? தாங்கள் உருவாக்கிய திட்டத்தைவைத்தே மோசடி செய்ய பா.ஜ.க முயற்சி செய்கிறது.
குஜராத்தில் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். பா.ஜ.க அரசு மக்களைப் பிளவுபடுத்தி ஏமாற்றுகிறது. இதுபோன்ற ஆட்சியாளர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கும் நேரம் வந்துவிட்டது'' என்றார்.
''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பெண்களின் பாதுகாப்பு, மேம்பாடு, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது. நமது நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர்கூட காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் கிடைத்துள்ளார்'' என்றும் சோனியா காந்தி கூறினார்.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் பா.ஜ.கவிற்கு வருகின்ற தேர்தலில் குஜராத் மக்கள் பாடம்புகட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன. கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 127 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஐக்கிய ஜனதா தளக் கட்சியும், சுயேட்சைகளும் தலா 2 இடங்களைப் பெற்றன.