குஜராத் வன்முறைகள் தொடர்பாக அண்மையில் டெஹல்கா இதழ் வெளியிட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பிற்குப் பிறகு குஜராத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. பலர் உயிருடன் கொளுத்தப்பட்டனர். ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டது.
இக்கலவரத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு உள்ள தொடர்பை அண்மையில் டெஹல்கா இதழ் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது.
இதனடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சேவகர் தீஸ்த்தா செதல்வாட் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.
இம்மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, இந்த விடயத்தில் விரைவாக விசாரிக்கும் அளவிற்கு ஒன்றுமில்லை. சாதாரண முறையில் மனு விசாரணைக்கு வந்தால் போதும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக தீஸ்த்தா செதல்வாட் தாக்கல் செய்திருந்த மனுவின் விவரம் வருமாறு:
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறையில் சிவசேனா தலைவர் பாபு பஜ்ரங்கி, கோத்ரா பா.ஜ.க. எம்.எல்.ஏ ஹரேஸ் பாட், மாநில முதல்வர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் கோவர்தன் சதாஃபியா உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்புள்ளது என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் உள்ளன.
எனவே இது தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும.
குஜராத் வன்முறை நிகழ்வுகளைக் கண்ணால் கண்ட சாட்சிகள் உள்ளிட்ட முக்கியச் சாட்சிகளுக்கு போதுமான பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும்.
டெஹல்கா தந்துள்ள ஆதாரங்களை இந்திய ஆதாரச் சட்டத்தின் கீழ் பாதுகாக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.