இந்தியாவின் நலன்களைவிட சீனாவின் நலன்களைப் பற்றித்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகம் கவலைபபடுகிறது என்று பா.ஜ.க குற்றம்சாற்றியுள்ளது.
அமெரிக்க- இந்திய உறவுகள் சீனாவைச் சுற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளன என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குறிப்பிட்டிருப்பதன் மூலம் அக்கட்சியின் உண்மைமுகம் வெளிப்பட்டுவிட்டது என்று பா.ஜ.க கூறியுள்ளது.
''பிரகாஷ் காரத்தின் கருத்துகள் மார்க்சிஸ்ட் கட்சியின் இரட்டை வேடத்தை முழுவதுமாக வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் நலன்களை இரண்டாமிடத்திலும், சீனாவின் நலன்களை முதலிடத்திலும் அக்கட்சி வைத்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது'' என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நாட்டின் நலனுக்காகத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது. எங்களுக்கு இந்தியாவின் நலன் மட்டும்தான் முக்கியம். அதை அந்த ஒப்பந்தம் பாதுகாக்காது.
போபாலில் நடைபெற்ற தேசியச் செயற்குழுவில் இந்திய- அமெரிக்க உறவுகளுக்குச் சாதகமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ஓப்பந்தத்திற்கு எதிராக அந்தத் தீர்மானம் இருந்தது. ஏனெனில் அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் நலனைப் பாதுகாப்பதாக இல்லை.
மத்திய அரசின் அமெரிக்க ஆதரவு நிலையை எதிர்க்கும் மார்க்சிஸ்டுகள், மேற்கு வங்காளத்தில் ஏராளமான அமெரிக்க மூலதனத்தை வரவேற்றுள்ளனர். இதுவே மார்க்சிஸ்டுகளின் இரட்டை வேடத்திற்கு ஆதாரமாகும்.
கொல்கத்தாவிற்கு அமெரிக்காவிலிருந்து வந்துள்ள எல்லா மூலதனங்களும், முதலீடுகளும் ஏகாதிபத்தியத்திற்கு வழி ஏற்படுத்தாதா? என்பதை பிரகாஷ் காரத் விளக்க வேண்டும்.
மன்மோகன் சிங்கின் அரசிற்கு அளித்து வரும் ஆதரவும் மார்க்சிஸ்டுகளின் முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள மார்க்சிஸ்டுகள் தயாரா என்பதையும் அறிந்து கொள்ள பா.ஜ.க விரும்புகிறது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.