தனது இல்லத்திற்கு வந்த செய்தியாளரையும், புகைப்பட நிபுணரையும் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பீகார் மாநில சட்டப்பேரவை ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஆனந்த் சிங்கிற்கு, சிறுமி ரேஷ்மா கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதா என்பது குறித்து அவரிடம் மத்திய புலனாய்வுத் துறையினர் இன்று விசாரணை செய்தனர்.
பாட்னாவில் ரேஷ்மா காட்டுன் என்ற சிறுமி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாநில முதல்வர் நிதிஷ் குமார், காவல்துறை தலைவர் ஆஷிஷ் ரன்ஞன் சின்ஹா, ஊடகங்கள் ஆகியோருக்கு அச்சிறுமி தன்னைக் காப்பாற்றுமாறு எழுதியுள்ள கடிதத்தில் ஆனந்த் சிங் பெயரைக் குறிப்பிட்டிருந்தாள்.
இது தொடர்பாக ஆனந்த் சிங்கின் கருத்தை அறியும் பொருட்டு, என்.டி.டி.வி ஊடகத்தின் செய்தியாளர் பிரகாஷ் சிங், ஒளிப்பதிவாளர் ஹபீப் அலி ஆகியோர் அவரின் வீட்டிற்குச் சென்றனர்.
அனுமதி பெற்றுச் சென்ற செய்தியாளர்களை வரவேற்ற எம்.எல்.ஏ., பின்னர் அடியாட்களுடன் சேர்ந்து தடியாலும், துப்பாக்கியின் பின்புறத்தாலும் அவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
அவர்களிடமிருந்து தப்பிய ஒளிப்பதிவாளர் ஹபீப் அலி, காவல் துறைத் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு செய்தியாளரைக் காப்பாற்றுமாறு கோட்டிருக்கிறார்.
அதற்குள் தகவலறிந்து மற்ற செய்தியாளர்கள் ஆனந்த் சிங் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். அவர்களையும் ஆனந்த் சிங்கின் அடியாட்கள் தாக்கியுள்ளனர். இதில், ஏ.என்.ஐ ஒளிப்பதிவாளர் அஜய் குமாரின் கை உடைந்தது. ஜன்சாத்தா இதழின் செய்தியாளர் கங்கா பிரசாத் படுகாயமடைந்தார்.
காவலர்கள் விரைந்து வந்து பிரகாஷ் சிங்கை மீட்டனர். அவரும், காயமடைந்த மற்ற செய்தியாளர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனந்த் சிங் தனக்கு கடுமையான நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்த் சிங் உள்பட 5 பேரைக் கைது செய்தனர்.
செய்தியாளர்களைத் தாக்கியதுடன், அவர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கிய 5 பேரையும் 14 நாள் காவலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி ஆர்.சிங் உத்தரவிட்டார்.
செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்தார். மேலும், சிறுமி ரேஷ்மா காட்டூன் கொல்லப்பட்ட விவாரத்தில் ஆனந்த் சிங்கிற்குத் தொடர்புள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதற்கிடையே, செய்தியாளர்களைத் தாக்கிய ஆனந்த் சிங்கைக் கண்டித்து முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் நடைபெறும் இந்த முழு அடைப்பிற்கு, காங்கிரஸ், லோக் ஜனசக்தி, இடதுசாரி கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி உட்பட ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
தலைநகர் பாட்னாவில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.