ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளை நவீனமாக்குவது அவசியமானது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வலியுறுத்தியுள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற கப்பல்படை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ''பாதுகாப்புப் படைகளை நவீனமாக்குவது என்பது எல்லா நாடுகளுக்கும் அவசியமானது. குறிப்பாக அண்டை நாடுகள் இந்த விசயத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த விவகாரம் வெளிப்படையாக அமைந்து விடக்கூடாது'' என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் தொடரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் கவலையளிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் வன்முறை நிகழ்வுகள் பாதியாகக் குறைந்துள்ளது திருப்தியளிக்கிறது.
வன்முறைகள் குறைந்துள்ளதன் காரணம் குறித்து அம்மாநில அரசுடன் பேச்சு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் பள்ளிகள், மருத்துவமனைகள். விருந்தினர் விடுதிகள் ஆகியவற்றின் அருகில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் வருகிற 30-ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரைத் திரும்பப் பெறுவதற்கு எந்தக் காலக்கெடுவும இல்லை. பாதுகாப்புச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்து வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கேரள மாநிலம் கண்ணூரில் எழில்மலை கடற்படைக் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்காக ஆணையம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இக்கல்வி நிறுவனம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாக அமையும் என்று அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.