அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணும் வகையில், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் உள்ள சிக்கல்களைச் சுமூகமாகத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற கடற்படை விழாவில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ''எந்த நாட்டுடனும் முரண்படுவதற்கு நாம் விரும்பவில்லை. ஆனால், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உள்ள சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன'' என்று குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகாரபூர்வமாகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லை என்று எதுவும் இல்லை. எனவே இந்திய- சீன எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது. அவர்களிடம் ஒரு வரையறை உள்ளது, நம்மிடம் ஒரு வரையறை உள்ளது.
ஏதாவது பெரிய சிக்கல் ஏற்பட்டால் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அரசுத் துறை அதிகாரிகளும் கூடி ஒரு தற்காலிகத் தீர்வைக் கண்டறிவோம்.
எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தற்போது சீன அரசிற்கும், நமது பிரதமர் மன்மோன் சிங்கின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கும் இடையில் தீவிரமான பேச்சு நடந்து வருகிறது. அண்மையில் 11-வது சுற்றுப் பேச்சுகள் முடிவடைந்துள்ளன. பேச்சு தொடரும் என்றும் அமைச்சர் அந்தோணி கூறினார்.