முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் சீக்கியர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது இல்லத்தில் வைத்து அவரது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக தாக்குதல்கள் அரங்கேறியது.
இந்த நிகழ்வுகளில் 2,733 பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் 4,000க்கும் அதிகமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சீக்கிய அமைப்புகள் கூறுகின்றன.
தலைநகர் டெல்லியில் மட்டும் 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள், சாட்சிகள் இல்லாததால் காவல் துறையினரே அந்த வழக்குகளை ரத்து செய்துள்ளனர். இது தொடர்பாக 10 பேர் தான் இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய சீக்கிய அமைப்பினர், உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினையை தன் முனைப்பு வழக்காக எடுத்துக் கொண்டு, இக்கலவரத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் தீவிரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது படுகொலைத் தாக்குதல் நடத்தி அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவித்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொலையாளிகள் இன்று உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்கள் அமைந்துள்ள இடங்களில் நடமாடி வருகின்றனர். அவர்களை யாரும் எவ்வித கேள்வியும் கேட்க இயலாத நிலைதான் உள்ளது என்று குர்சரண் சிங் பப்பர் என்பவர் தெரிவித்தார். மேலும் அத்தகைய குற்றவாளிகள் இன்றும் நடமாடி வருவது ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.
இந்திரா காந்தியை கொலை செய்த சத்வந்த் சிங்கின் தந்தை தர்லோக்சிங் கூறும்போது, தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் அகவான் கிராமத்தில் ஆரம்பத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவைத் தொடர்ந்து எங்களை மக்கள் வெறுத்தனர். தற்போது எங்களின் நேர்மையான நல்ல வாழ்க்கை முறையை அடுத்து எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார் தந்தை தர்லோக்சிங்.