Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார் விமான நிலையங்கள் : பிரஃபுல் பட்டேல்

தனியார் விமான நிலையங்கள் : பிரஃபுல் பட்டேல்

Webdunia

, வியாழன், 1 நவம்பர் 2007 (17:19 IST)
இந்திய விமான சேவைத் துறையில் அதிகளவில் தனியார்களை பங்கேற்கச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய விமானப போக்குவரத்துக் கொள்கை அறிவிக்கப்பட உள்ளதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.

விமானச் சேவைத் துறையில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் பெருகிவரும் தேவையை எதிர்கொள்வதாக இல்லை என்று அமைச்சர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

மேலு‌ம் தற்போது மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, புதிதாக சிறிய நகரங்களுக்கும் கூட விமான சேவையை அறிமுகம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரலில் புதிய விமான போக்குவரத்துக கொள்கை வகுக்கப்பட்டு, இத்துறையில் அதிக அளவில் தனியாரை ஈர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த புதிய கொள்கை நடைமுறைக்கு வரும்போது, நாட்டி‌ன் வணிக மற்றும் தனியார் விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்த அவர், அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறையில் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி 20 விழுக்காடாக இருக்கும் என்று அமைச்சர் பிரஃபுல் பட்டேல் மேலும் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சியின் விளைவாக அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ம‌‌ட்டும் தனது சேவைகளுக்காக 500 விமானங்களை வாங்க வேண்டியது உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது உருவாகியுள்ள இந்த நிலைக்கு காரணம், இந்திய வான்வெளி சேவையில் களம் இறங்கியுள்ள குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வசம் தற்போது உள்ள விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதுடன் அதன் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை விரிவாக்கும் பட்சத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத், பெங்களூரில் பொதுத் துறை, தனியார் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு வரும் பசுமை மாறாத அளவிலான விமான நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஏற்கனவே மும்பையில் 2வது விமான நிலையம் கட்ட மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. அதே போன்று நாட்டின் நெரிசல் மிகுந்த மும்பை, டெல்லி விமான நிலையங்களை மேம்படுத்தும் பணியை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து தனியார் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிய கண்டத்தின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் ஆர்வம் காட்டி வருகின்றது.

இத்துறையில் அந்நிய முதலீட்டை 40ல் இருந்து 49 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியதில் இருந்து உலகில் பல்வேறு தலைச்சிறந்த விமான நிறுவனங்களும், இந்தியாவில் கால் பதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காலம் காலமாக விமான சேவைத் துறையில் தனித்து இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தனியார் விமான சேவை நிறுவனங்களாக ஜெட் ஏர்லைன்ஸ், கிங்பிஷர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களின் குறைந்த கட்டணச் சேவையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil