நதிகள் இணைப்பு விவகாரத்தில் மாநில முதல்வர்கள் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய நதிநீர் மேம்பாட்டுக் கழகமும் புதுவை அரசும் இணைந்து நடத்தும் 12-வது தேசிய நதிநீர் மாநாட்டைத் தொடக்கி வைத்த அமைச்சர் சைஃபுதீன் சோஸ், நதிகள் இணைப்பிற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார்.
முதல்கட்டமாக 5 வறண்ட நதிகள் உட்பட 30 நதிகளை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
உத்தரபிரதேசத்திற்கும் மத்தியப்பிரதேசத்திற்கும் இடையில் உள்ள நதிகளை இணைப்பது தொடர்பாக விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
குஜராத்திற்கும் மராட்டியத்திற்கும் இடையிலான நதிகளை இணைப்பது தொடர்பான திட்டம் அந்தந்த மாநில முதல்வர்களின் கைகளில் உள்ளது.
நதிகளை இணைப்பது என்பது, புரிந்துணர்வு மிகுந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையில் கூட சுலபமான விசயமல்ல.
குறிப்பாக பிராத்பி, நர்மதா நதிகளை இணைப்பதற்காக ஒரிசா, சண்டிகர் மாநில முதல்வர்களிடையில் இணக்கம் எற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்திற்கு பயனளிக்கும் வகையில் பாலாறையும் பெண்ணையாறையும் காவிரியுடன் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிச்சயம் ஆலோசிக்கும்.
உலகம் வெப்பமயமாதல், பருவநிலை மாற்ற பாதிப்புகள் போன்ற முக்கியப் பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் திருப்தியளிப்பதாக இல்லை.
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று சைஃபுதீன் சோஸ் கூறினார்.