எதிர்காலத்தில் அதிகரிக்கும் உணவு தானியத் தேவையை நிறைவு செய்யத் தேவைப்படும் பாசன வசதியை பெருக்க வேண்டுமெனில் நமது நாட்டின் நதிகளை இணைப்பது அவசியம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் கூறியுள்ளார்.
புதுவையில் நடைபெற்ற தேசிய நதிநீர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், தீவிரமாக முயற்சி செய்தால் நதிகள் இணைப்பு நிறைவேறும். திட்டமிட்டபடி இத்திட்டம் நிறைவேறினால் ஒருநாள் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக அது விளங்கும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மாநிலத்திற்கு மாநிலம் நீராதாரங்கள் மாறுகின்றன, மழை பெய்யும் அளவு மாறுபடுகிறது. எனவே அதற்கேற்ற வகையில் நீர்பிடிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம்.
எதிர்காலத்தில் உணவுத் தேவை அதிகரிக்கும். 2050-ஆம் ஆண்டில் நமது நாட்டின் உணவுதானியத் தேவை 450 மில்லியன் டன்னாக இருக்கும்,
நமது நாட்டில் எல்லா வகையிலும் சேர்த்து 140 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. இதை 160 மில்லியன் ஹெக்டேராக அதிகரிக்க வேண்டும்.
இவ்வளவு நிலத்திற்கும் நீர்ப்பாசன வசதிகளைச் செய்துதர இப்போதிருக்கும் நீராதாரங்கள் போதாது. நதிநீர் இணைப்பே இதற்கு தீர்வாக அமையும்.
இதுதவிர நமது பழங்கால நீர் சேமிப்பு முறையான மழை நீர் சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும். புதிய நீர் சேமிப்புத் திட்டங்களை நமது பொறியாளர்கள் உருவாக்க வேண்டும்.
உலகம் வெப்பமயமாதல் நிகழ்வால் நமது நாடு வறட்சியில் சிக்கிவிடாமல் தடுப்பதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்றும் சோஸ் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.