இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கு விரும்புகிறோம் என்று ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி வந்துள்ள ஃபிரான்ஸ் அமைச்சர் வலேரி பெக்ரெசே செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவுடன் உள்ள அணுசக்தி ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இந்தியா சர்வதேச அணுசக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அதனடிப்படையில் அணு எரிபோருள் வழங்கும் நாடுகள் குழுவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார்.
சர்வதேச சட்டங்களின் தேவையை இந்தியா நிறைவு செய்ய வேண்டும். இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பைநாங்கள் தொடர்வதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச அணுசக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தம் தேவையில்லை என்று ஃபிரான்ஸ் முன்பு கூறியதைப் பற்றிக் கேட்டதற்கு, சர்வதேசச் சட்டங்கள் மாறிவிட்டன, அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்று பெக்ரெச பதிலளித்தார்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்துக் கேட்டதற்கு, இந்திய அரசியலில் தான் தலையிட விரும்பவில்லை என்றார்.