கோத்ரா வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோத்ரா வன்முறை நிகழ்வுகளில் நரேந்திர மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை டெஹல்கா இதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டது.
எனவே வன்முறைகளில் தொடர்புடையவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர்கள் காந்தி சிங், ஜே.பி. யாதவ், தஸ்லிமுதீன், பிரேம் குப்தா உள்பட ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.களுடன் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று பிரதமரைச் சந்தித்தார்.
குஜராத் முதல்வர் மோடியையும், மற்றவர்களையும் கொலைக் குற்றத்தில் கைது செய்வதற்குத் தேவையான ஆதாரங்களை டெஹல்கா வழங்கியுள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம் என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.
மோடியைப் பாதுகாத்த குற்றத்திற்காக முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லாலு வலியுறுத்தியுள்ளார்.