''அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனது நேர்மையை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் கைவிடப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு இடதுசாரிகள் உடனடியாகப் பதிலளித்துள்ளனர்.
புது டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங் மீது நாங்கள் உரிய மரியாதை வைத்துள்ளோம். அவர் தனது நேர்மையை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கையும் எங்களிடம் உள்ளது. இதில் எந்தக் கேள்வியும் எழவில்லை.
அணுசக்தி கொள்கையில் பிரதமர் வேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளார். அதை அவர் வெளிப்படையாக கூறி வருகிறார். இதற்காக நாங்கள் அவரை பாராட்டுகிறோம்.
மன்மோகன் சிங் பிரதமராக தொடர்ந்தால் அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினை நீடித்து கொண்டே இருக்கும் என்றும் நாங்கள் கருதவில்லை. மத்திய அரசில் கூட்டணி கட்சிகளின் உணர்வுக்கு உரிய மரியாதை இருக்கும் என்று நம்புகிறோம்.
பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியினரிடமும் நாங்கள் மெல்லிய அணுகுமுறைகளையே மேற்கொள்கிறோம். இந்த பிரச்சினையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை.
அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே மாறுபட்ட கொள்கைகள் உள்ளன. எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பிரகாஷ் காரத் கூறினார்.