கர்நாடகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.கவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து அறிவித்துள்ளன.
பா.ஜ.க மாநிலத்தலைவர் டி.வி. சதானந்த கெளடா, ம.ஜ.த. மாநிலத் தலைவர் மீராஜூதீன் பட்டேல் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிவிப்பில், கர்நாடகத்தில் ஆட்சியமைக்குமாறு இன்று மாலைக்குள் தங்களை ஆளுநர் அழைக்காவிட்டால் நாளை ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தத் தயாராகுமாறு தங்கள் கட்சிகளின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடகத்தில் ம.ஜ.த. எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கான தங்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், 24 மணி நேரத்திற்குள் தங்களை ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்றால் மாநிலந்தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று பா.ஜ.க எச்சரித்தது.
ம.ஜ.த. தலைவர் தேவெகவுடாவும் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ள கர்நாடக சட்டப் பேரவையில் 129 உறுப்பினர்கள் பா.ஜ.க- ம.ஜ.த. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.