கர்நாடகச் சட்டப்பேரவையில் தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை அழைக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநரைப் பா.ஜ.க கோரியுள்ளது.
இது தொடர்பாகப் புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, கர்நாடகத்தில் பா.ஜ,கவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்து 72 மணி நேரத்திற்கும் மேலான நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அழைக்கத் தாமதிப்பதன் நோக்கத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
“கோவா, ஜார்கண்ட் மாநிலங்களில் பின்பற்றியதைப் போல, காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதில்லை என்ற பழைய அரசியல் விளையாட்டையே கர்நாடகத்திலும் காங்கிரஸ் பின்பற்றி வருகிறது. புறக்கதவு வழியாக ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது.
சட்டப்படி தேவையில்லை என்றாலும்கூட பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தனித்தனி வாக்குமூலங்களை ஆளுநரிடம் கொடுத்துவிட்டனர். எனக்குத் தெரிந்து மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 45 எம்.எல்.ஏக்கள் தங்கள் வாக்குமூலங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 24-ஆம் தேதி முன்னாள் பிரதமர் தேவெகவுடா எழுதிய கடிதத்தைக்காட்டி சட்டப்பேரவை கலைக்கப்படும் என்று காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பியது. ஆனால், அந்தக் கடிதத்தை திரும்பப் பெற்று வேறொரு கடிதத்தை தேவெகவுடா எழுதியுள்ளார் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.
கர்நாடகாவில் தற்போது நிலவும் அரசியல் சூழலின்படி எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அல்லது தேர்தல் நடைபெற வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள், அரசமைப்பதற்கான நடைமுறைகளின்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னிந்தியாவில் முதல் பா.ஜ.க அரசை உருவாக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.