கர்நாடக பா.ஜ.க மற்றும் மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர் இவ்விரு கட்சிகளின் உறுப்பினர்களும் ஆளுநர் முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
அப்போது தம்மை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனித்தனியாக பிரமாணப் பத்திரங்களை பெற்று ஆளுநரிடம் அளிக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக கர்நாடக மாநில பா.ஜ.க விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா நேற்று கர்நாடக மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்தித்து, பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, முடக்கி வைக்கப்பட்டுள்ள கர்நாடக சட்டசபையை கலைக்க வேண்டியது அவசியம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜுன கார்கே ஆளுநரை சந்தித்து வலியுறுத்தி உள்ளார். சட்டசபையை கலைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசும் ஆர்வம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயன்ற மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி மூத்த தலைவர் எம்.பி.பிரகாஷ் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.கவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க அவர் விரும்பவில்லை என்பதால் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, தமது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை பெங்களூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஓய்விடம் ஒன்றில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.