கர்நாடக மாநிலத்தில் அரசு அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்ற மதசார்பற்ற ஜனதாதள மூத்த தலைவர் எம்.பி.பிரகாசை சந்தித்து பேசினார்.
கர்நாடக மாநில அரசியலில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக மதசார்பற்ற ஜனதாதளம் அறிவித்தது. இதனையடுத்து இரு கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.
இந்நிலையில் மதசார்பற்ற ஜனதாதள மூத்த தலைவர் எம்.பி.பிரகாசை, பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பா சந்தித்து பேசினார். காங்கிரசோடு இணைந்து எம்.பி.பிரகாஷ் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் பின்னர் திடீர் திருப்பம் ஏற்பட்டு மதசார்பற்ற ஜனதாதளம், பா.ஜ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தது.
இதனால், கட்சி தன்னை ஏமாற்றிவிட்டதாக எம்.பி.பிரகாஷ் கோபமடைந்துள்ளார். இந்நிலையில் எடியூரப்பா அவரை சந்தித்து பேசியுள்ளார். எம்.பி.பிரகாஷ் இல்லத்திற்கு சென்ற எடியூரப்பா, ஆட்சி அமைக்க ஆதரவு கோரியதோடு, அமைச்சரவையிலும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதிப்பதற்காக பா.ஜ.க.வின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.