கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹெச்.டி.குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதாதளம் (ஜே.டி.எஸ்.) -பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றது.
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.க.விடம் ஒப்படைக்க ஜே.டி.எஸ். மறுத்து விட்டது. எனவே அக்டோபர் 6ஆம் தேதி தனது ஆதரவை பா.ஜ.க. விலக்கிக் கொண்டது. இதனால் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது.
பிறகு, கடந்த 9ஆம் தேதி கர்நாடகாவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அரசியல் கட்சிகள் புதிய கூட்டணி ஏற்படுத்த ஏதுவாக சட்டசபை கலைக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.எஸ். செய்தித் தொடர்பாளர் ஒய்.எஸ்.வி.தட்டா, பா.ஜ.க. தலைமையில் அரசு அமைந்தால், தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.
இதை முன்னாள் முதல்வர் குமாரசாமியும் உறுதி செய்துள்ளார். ஆதரவளிக்கும் முடிவிற்கான கடிதம் ஏற்கனவே ஆளுநர் ராமேஸ்வர தாகூருக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சி அமைத்தால் முன்னாள் துணை முதல்வர் எடியூரப்பா முதல்வர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.