மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கொச்சி துறைமுகம் நாட்டின் முதல் மின்னணு துறைமுகமாகிறது.
கொச்சி துறைமுகப் பணிகளை முழுவதுமாக ஒருங்கிணைந்து கணினி முறையில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முழுவதுமாக ஒருங்கிணைந்து கணினி மயமாக்கும் பணிகள் கடந்த வாரம் துறைமுக சபைத் தலைவர் என். ராமச்சந்திரனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது நாட்டில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்களில் முழுவதும் கணினி முறையில் இயங்கும் முதல் துறைமுகம் கொச்சி துறைமுகம் என்ற இடத்தைப் பெறும் என்று என். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கொச்சி துறைமுக பணிகளை முழுவதுமாக கணினி மயமாக்கும் பணியை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் 10 மாதங்களுக்கு முடித்துத் தருவதாக உறுதி அளித்துள்ளது.
வணிக வேறுபாடுகள், சர்வதேச வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள துறைமுக அன்றாட பணிகளை ஒட்டுமொத்தமான கணினி மயமாக்க முடிவு செய்யப்பட்டதாக துறைமுக சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மின்னணு துறைமுகமாக மாறும் நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி, கப்பல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சர்வதேச தரத்திலான சேவைகள் கொச்சி துறைமுகத்தில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.