மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் வழங்கும் சிறந்த நாடகத்திற்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆங்கிலம், ஹிந்தி, மற்ற பிராந்திய மொழிகளில் நாடகம் நடத்துபவர்கள் பங்கேற்கலாம்.
மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய அளவில் சிறந்த நாடகங்களுக்கான விருது வழங்கி வருகிறது. தற்போது மூன்றாவது ஆண்டிற்கான போட்டியை அறிவித்துள்ளது.
இந்த விருது சிறந்த நாடகத்திற்கான வசனம், இயக்கம், நடிப்பு, ஒளி அமைப்பு, ஒலி அமைப்பு, ஒப்பனை, நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, நாடக கதை ஆசிரியர் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படும்.
இந்த விருது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மும்பையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்கேற்கும் நாடகங்கள் இந்தியாவில் அல்லது அந்நிய நாடுகளின் கதையாக இருக்கலாம். அல்லது இந்த கதைகளை தழுவி தயாரிக்கபட்ட நாடகமாக இருக்கலாம். வசனம் உள்ள நாடகமாகவோ, அல்லது அங்க அசைவுகளின் மூலம் நடிக்கும் நாடகமாகவும் இருக்கலாம். அத்துடன் பொம்மலாட்டம், நடனம், நவீன ஊடகமான மல்டி - மீடியா ஆகிய நாடகங்களாகவும் இருக்கலாம்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் நாடக குழுக்கள், தனி நபர்களுக்கு பரந்த நாடக ரசிகர்கள் மத்தியில், அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள டிசம்பர் 31 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சர்வதேச அளவில் நாடகத்துறையில் புகழ்பெற்றவர்கள் இடம்பெறும் நடுவர்கள் குழு, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் சிறந்த நாடகங்களை நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த விருதுக்கான போட்டியின் இயக்குநர் ரவி துபே செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த வருடம் நடந்த போட்டிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 90 நாடகங்கள் பங்கேற்றன. இந்த வருடம் நடக்கும் போட்டிக்காக பாட்னா, லக்னோ, சண்டீகர், அகமதாபாத், பரோடா, கொச்சி ஆகிய நகரங்களுக்கு சென்று விளக்கியுள்ளேன். ஆதலால் அதிகளவு நாடகங்கள் போட்டியில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கி்ன்றோம்.
இந்த நாடக போட்டியை பற்றி பிரபல நடிகை நீனா குப்தா கூறுகையில், இந்த போட்டி இந்தியாவில் உள்ள நாடக குழுக்களை ஊக்குவிக்கவும், புனரமைக்கவும் நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் மூலம் இந்திய நாடக உலகின் திறமை வெளிப்படுத்தப்படும்.
சென்ற வருடம் நாடக துறையின் முன்னோடிகளான சியாம் பெனகல், அனிதா ரத்தினம், ஜாய் மிக்கேல், அமோல் பலேகர், மகேஷ் எல்கின்ஷர் அடங்கிய நடுவர் குழு, இறுதிகட்ட போட்டியை நடத்தி, விருதுக்கானவர்களை தேர்ந்தெடுத்தது.
இந்த வருடம் நடுவர் குழுவில் சபனா ஆஷ்மி, இலாஅருண், சியம்மந்த் ஜலான், எம்.எஸ். சத்யூவ், ஜபார் ஹை, கே. ரய்னா ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று நீனா குப்தா தெரிவித்தார்.
அகில இந்திய அளவிலான சிறந்த நாடகங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், இந்தியாவின் முதல் பத்து தொழில் நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள நிறுவனமாகும்.
உலக அளவில் டிராக்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முன்னணி ஐந்து டிராக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், மகேந்திரா அண்ட் மகேந்திராவும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இது டிரக், வேன் போன்ற வாகனங்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த குழுமம் வாகன உற்பத்திக்கு தேவையான பாகங்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், தொலைபேசி துறை, அடிப்படை கட்டுமானம் ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டுள்ளது.