ஜார்கன்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகன் உட்பட 17 பேரை நக்ஸலைட்டுகள் சுட்டு கொன்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் கீரிதிக் மாவட்டத்தில் உள்ளது சில்காடியா கிராமம். இங்கு நேற்று காலை கால் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இரவு கலாச்சார (கேளிக்கை) நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை பெருந்திரளாக உள்ளூர் மக்கள் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களுடன் 30 நக்ஸசலட்டுகளும் இருந்துள்ளனர்.
நள்ளிரவு 1 மணியளவில் திடீரென நக்ஸலைட்டுகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். அத்துடன் கையெறிகுண்டுகளையும் வீசினார்கள். இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
படுகாயமடைந்த மூன்று பேர் சிறிது நேரத்தில் இறந்தனர்.
இந்த தாக்குதலில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகனும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக துணை காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமார் சிங் தெரிவித்தார். இதில் மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
மேலும் அவர் கூறுகையில், இந்த சம்பவம் நடந்த இடம், பீகார் மாநிலத்தின் எல்லையில், ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள், தாக்குதல் நடத்தி விட்டு பீகார் மாநிலத்திற்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கூறினார்.
இங்கு கலாச்சார நிகழ்ச்சி நடைபெறுகின்றது என்ற தகவல் காவல் துறைக்கு கிடைத்தது. இதில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பாதுகாப்பிற்கு காவல் துறை ஆய்வாளரின் கீழ், காவலர்கள் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் அவர் மாலையிலேயே அந்த கிராமத்தை விட்டு சென்று விட்டார். அவர் நிகழ்ச்சி முடியும் வரை இருந்திருக்க வேண்டும். இது அந்த ஆய்வாளரின் அப்பட்டமான கடமை தவறிய செயல் என்று துணை காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமார் சிங் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பாபுலால் மராண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னுடைய குடும்பத்தாருக்கு நக்ஸலைட்டுகளின் அச்சுறுத்தல் உள்ளது. காவல்துறையினர் முன் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். எனக்கு கிடைத்த தகவல்களின் படி, தாக்குதலில் ஈடுபட்ட நக்ஸலைட்டுகள், மத்திய ரிசர்வ் காவலரின் சீருடையில் வந்ததாக தெரிகிறது என்றார்.
அவர்கள் பொதுமக்களுடன் உட்கார்ந்து கொண்டு கலாச்சார நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். பிறகு திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் எனது மகன் அனுப் கொல்லப்பட்டுள்ளார். ஆனால் எனது சகோதரர் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிவிட்டார் என்று பாபுலால் மராண்டி தெரிவித்தார்.