Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவி்ல் பாமாயில் தடை!

ஆந்திராவி்ல் பாமாயில் தடை!

Webdunia

, வியாழன், 25 அக்டோபர் 2007 (11:04 IST)
ஆந்திர மாநில அரசு இறக்குமதி செய்த பாமாயிலை விற்பனை செய்ய தடை விதிக்க ஆலோசித்து வருகிறது.

மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை, இங்குள்ள நிறுவனங்கள் பாலிதீன் பைகளில் அடைத்து விற்பனை செய்கின்றன. இதே போல் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப் படாத பாமாயிலை, இங்குள்ள நிறுவனங்கள் சுத்திகரித்து விற்பனை செய்கின்றன.

இந்தியாவில் முன்பு சமையலுக்கு நல்லெண்ணெ‌ய், கடலெண்ணெ‌ய், கடுகெண்ணெ‌ய், தேங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ஆகியவை மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தன.

இவைகளுக்கு பதிலாக தற்போது சமையல் அறைகளில் பாமா‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஆக்கிரமித்து கொண்டு விட்டது. இதனால் உள்நாட்டு எண்ணெ‌ய் வித்து பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நிலகடலை, கொப்பரை தேங்காய்,. எண்ணெய், கடுகு ஆகியவைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா எண்ணெ‌ய் ஆகியவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இவற்றின் இறக்குமதி வரியை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளிடம் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.

ஆனால் உலக வர்த்தக ஒப்பந்தப்படி, இவைகளுக்கு தடை விதிப்பதோ அல்லது குறிப்பிட்ட விழுக்காடுக்கு மேல் இறக்குமதி வரி விதிக்க முடியாது. இது போன்ற பல காரணங்களினால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் கடலை எ‌ண்ணெ‌ய் விலை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் இறக்குமதி செய்யப்படும் பாமாயில் தான் என்று வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடலெண்ணெய் விலை குறைவதால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நிலக்கடலையின் விலையும் சரிகின்றது.

எனவே ஆந்திர மாநில அரசு இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை, ஆந்திராவில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க ஆலோசித்து வருகிறது.

ஹைதரபாத்தில் நேற்று ஆந்திர மாநில விவசாயத்துறை அமைச்சர் என்.ராகவீரா, கரீப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்வது பற்றி ஆய்வு செய்தார். அப்போது, அவர் பாமாயிலை தடை செய்வது பற்றிய அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த அறிக்கையின் அடிப்படை.யில் ஆந்திர அரசு பாமாயிலை ஆந்திராவில் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது பற்றி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

ஏற்கனவே கேரளாவில் தேங்காயெண்ணையின் உபயோகம் குறைந்து, கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்தது. கொப்பரை விவசாயிகளை பாதுகாக்க கேரள மாநில அரசு கொச்சி துறைமுகத்தில் பாமாயில் இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil