மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தை முடக்கியதைப் போல நடந்து கொள்ளாமல் முழு ஒத்துழைப்பு தர பா.ஜ.க. உறுதியளித்தால் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தயார் என்று இடதுசாரிகளிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 2வது வாரத்தில் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பு முடிவடைவது இயல்பு.
இந்நிலையில், வரும் டிசம்பர் 11 மற்றும் 16 ஆம் தேதிகளில் 2 கட்டமாக குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை தேர்தலுக்கு இடையூறு இல்லாத வகையில் முன்னதாகவோ அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ கூட்டலாம் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் வைத்துள்ளன. இதனிடையே குளிர்கால கூட்டத் தொடரை தீபாவளி முடிந்த பின்னர் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு பின்பு தொடங்கி இரண்டு வார காலம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
இதனிடையே, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் மழைக்கால கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் செயல்படவிடாமல் பா.ஜ.க. நடந்து கொண்டதைப் போன்று சிறப்பு கூட்டத் தொடரில் நடந்து கொள்ளாது என்ற உத்தரவாதம் தரப்பட்டால் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் தயார் என மத்திய அரசு இடதுசாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகின்றது.
குஜராத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை எப்படியாவது ஓரம்கட்ட வேண்டும் என்று நினைக்கும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான நாடாளுமன்ற சிறப்பு விவாதத்தை பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் உள்ளன.