டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டப் பேரைவத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிப்படையான ஆதரவு தராது என்று அந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுந்த்ராவ் தேவ் பங்கர் தெரிவித்துள்ளார்.
குஜராத் பா.ஜ.க.வில் நரேந்திர மோடிக்கும், முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பான தனி நபர் காழ்ப்புணர்ச்சி சண்டை குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவ் பங்கர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பா.ஜ.க.வின் உட்கட்சி பூசல் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முதன் முதலாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் முழுவதும் கேசுபாய் பட்டேல் மற்றும் மோடி எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்து விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசின் திட்டங்களைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியினர் பெருமளவு உதவி செய்து வருவதாகவும், பா.ஜ,க.வின்அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தவும் நரேந்திர மோடி எதிர்ப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.
ஒரு குடும்பத்தில் வளரும் இரு பிள்ளைகள் குடும்பச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை அக் குடும்பத்தில் உள்ள வயதானவர்கள் தடுக்க இயலாமல் பின்னால் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போன்று குஜராத் பா.ஜ.க.வில் நிலவும் பதவிச் சண்டை உள்ளதாக தேவ் பங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த கோஷ்டிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சட்டப் பேரைவத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக ஆதரிக்காது என்று நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் சங்க உறுப்பினர்கள் தேர்தலில் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்யும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.