Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3வது அணியுட‌ன் மார்க்சிஸ்ட் திடீர் ஆலோசனை!

3வது அணியுட‌ன் மார்க்சிஸ்ட் திடீர் ஆலோசனை!

Webdunia

, புதன், 24 அக்டோபர் 2007 (10:09 IST)
அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் புதிய திருப்பமாக, 3-வது அணி கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திடீர் ஆலோசனை நடத்தியது.

அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆர‌ம்ப‌ம் முதலே இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒப்பந்தம் குறித்து இடது சா‌ரிக‌ளி‌ன் ஆ‌ட்சேபனைகளை ஆராய அமை‌க்க‌ப்ப‌ட்ட உயர்மட்டக்குழு 5 முறை கூடியு‌ம் எ‌ந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஒப்பந்தத்துக்கு சில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பிரதமர் மன்மோகன்சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இப்பிரச்சினையில் குழப்பம் நீடிக்கிறது.

இந்த நிலையில், 3-வது அணி கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் க‌ம்யூனிஸ்டு கட்சி நேற்று ஆலோசனை நடத்தியது. 3-வது அணியின் முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் இல்லத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் சென்றார். அங்கு சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், அமர்சிங் மற்றும் 3-வது அணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அக்கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடு ஆகியோருடன் பிரகாஷ் கரத் ஆலோசனை நடத்தினார்.

அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வா‌ய்‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது. அணுசக்தி ஒப்பந்தம் பாராளும‌ன்ற‌த்‌‌தி‌ல் விவாதத்துக்கு வரும்போது இணைந்து செயல்படுவது குறித்து இந்த சந்திப்பின்போது வியூகம் வகுக்கப்பட்டதாக தெ‌ரி‌கிறது. இந்த ஆலோசனை கூட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.

இச்சந்திப்பு, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கூறுகை‌யி‌ல், இடதுசாரிகளும், சமாஜ்வாடி கட்சியும் இயற்கையான கூட்டாளிகள். எனவே நாங்கள் சந்திப்பது ஒன்றும் புதிது அல்ல. அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தில் சிக்கி தவிக்கிறது எ‌ன்றா‌ர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து 3-வது அணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், அரியானா முன்னாள் முதலமை‌ச்ச‌ர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் வீட்டில் நடைபெற்றது. அதில் பாராளுமன்றத்தில் செயல்படுவது குறித்து வியூகம் வகுக்கப்பட்டதாக தெ‌ரி‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil