ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- இடதுசாரிகள் உயர்மட்ட ஆய்வுக்குழுவின் இறுதி முடிவு தெரியும் வரை, சர்ச்சைக்குரிய இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று இடதுசாரிகளிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆய்வுக் குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் 16- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக உயர்மட்ட ஆய்வுக்குழுவின் கூட்டம் புது டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை இயல்பாகக் கைவிடும் விதத்தில், சிக்கலை ஆறப்போடும் வகையில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
''இன்றைய கூட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சுமூகமாக, ஆக்கபூர்வமான முறையில் விவாதிக்கப்பட்டது. சாதக, பாதகங்கள், ஹைட் சட்டத்தின் பாதிப்புகள், இந்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்படவிருக்கும் விளைவுகள், போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டன.
இடதுசாரிகள் எழுப்பியுள்ள எல்லா சந்தேகங்களுக்கும் உரியமுறையில் விளக்கமளிக்கப்படும்'' என்று குழுவின் தலைவர் பிரணாப் முகர்ஜி உறுதி கூறினார்.
மேலும், ஆய்வுக்குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் 16-ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அனேகமாக இந்தக் கூட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.
கூட்டத்திற்கு முன்னதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களும், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் தனித்தனியே கூடி விவாதித்தனர்.
இதில், பிரதமர் மன்மோகன் சிங் மிக இறுக்கமான நிலையில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
'அணுசக்தி ஒப்பந்தத்தால் ஆட்சி போகும் என்றால் அது வேண்டாம்' என்று அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.
'இப்போது தேர்தல் வந்தால் நாம் வெற்றி பெறச் சாதகமான சூழல் இல்லை; காங்கிரசுக்கே கூட அது நல்லதல்ல' என்று சரத்பவார் கூறியிருக்கிறார்.
முன்னதாக, நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளால் தான் கைவிடப்பட்டதாகக் கருதுவதாகவும், பதவி விலகப் போவதாகவும் அதிருப்தியுடன் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
அந்தச் செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. அவை ஆதாரமற்றவை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ' ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -இடதுசாரிகள் உயர்மட்ட ஆய்வுக் குழுவின் கருத்தைப் பொறுத்தே அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்' என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.