உலக வர்த்தக அமைப்புடன் நடத்தும் பேச்சு வார்த்தையின் போது விவசாய விளை பொருட்களின் மானியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மத்திய அரசு விட்டுக் கொடுக்க கூடாது என்று சீதாரம் யெச்சூரி கூறினார்.
பெங்களுரில் ஞாயிற்றுக் கிழமையன்று செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாரம் யெச்சூரி கூறியதாவது,
உலக வர்த்ததக அமைப்பின் கூட்டம் தோஹாவில் நடைபெற உள்ளது. இதில் விவசாய விளை பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த பேச்சு வார்த்தையின் போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியாக இருக்க வேண்டும். விவசாய துறைக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்க சம்மதிக்க கூடாது.
இந்த வார துவக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சிடம் தொலைபேசியில் பேசும் போது, தோஹா பேச்சுவார்த்தையின் போது, உடன் பாடு எட்ட இந்தியா விட்டுக் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவும் உறுப்பினராக உள்ள விவசாய விளைபொருட்கள் அல்லாத மற்ற பொருட்களின் வர்த்தகத்திற்கான அமைப்பு நாமா - 11, மற்றும் இந்தியா பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டணி ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து தோஹா உடன்பாட்டிற்காக இதன் தலைவர் பேச்சுவார்த்தை நடத்த சுற்றுக்கு விட்டுள்ள மாதிரி உடன்பாட்டு வளரும் நாடுகளால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூற வேண்டும் என யெச்சூரி வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இருந்து இந்தியா பின்வாங்க கூடாது. ஏனெனில் நாமா - 11 மற்றும் தோஹா பேச்சுவார்த்தையில் ஏற்படும் உடன்பாடு இந்தியாவின் விவசாயத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை இருக்கின்றது.
தோஹா பேச்சு வார்த்தையின் போது இந்தியா ஏற்கனவே எடுத்த நிலையில் இருந்து மாறுபடாது என்று நினைக்கின்றோம். மேற்கத்திய நாடுகள் பெருமளவில் மானியத்தை குறைக்காத வரை இந்தியாவும் மானியத்தை குறைக்காது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
விவசாய துறைக்கு வளர்ந்த நாடுகள் அதிகளவு மானியம் வழங்குகின்றன. அமெரிக்காவில் சில விவசாய உற்பத்தி பொருட்களுக்கு 200 விழுக்காடு வரை மானியம் வழங்கப்படுகிறது என்று யெச்சூரி கூறினார்.