அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இடதுசாரிகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக, காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் அடங்கிய அரசியல் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவின் கூட்டங்களில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறும் அளவுக்கு இடதுசாரி கட்சிகள் சென்றதால், மத்திய அரசு கவிழ்ந்து பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை உருவானது.
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் இருவரும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்தனர். பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வராது என்று திட்டவட்டமாக அவர்கள் இருவரும் அறிவித்தனர்.
சமீபத்தில் நைஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சுடன் டெலிபோனில் தொடர்புகொண்டு பேசிய அவர், ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இந்தியாவில் உள்ள சிக்கல்கள் பற்றி எடுத்துக்கூறினார். இதனால், அணுசக்தி ஒப்பந்தம் கைவிடப்படலாம் என்ற தகவல் வெளியானது.
ஆனால், ஒப்பந்தத்தின் மீது இன்னும் தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், இந்த பிரச்சினையில் சமரச முயற்சி தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடந்த வியாழக்கிழமை அன்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இதனால், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலை பற்றி குழப்பமான நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில், இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.
இடதுசாரி கட்சி தலைவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்பது இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.