Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்ய தனி சட்டம் : அரசு முடிவு?

அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்ய தனி சட்டம் : அரசு முடிவு?

Webdunia

, வெள்ளி, 19 அக்டோபர் 2007 (16:24 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹைட் சட்டத்தைப் போல, நமது நலனை உறுதிப்படுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது!

அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம், இந்தியா கடைபிடித்து வரும் சுதந்திரமான அயலுறவுக் கொள்கைக்கும், நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கூறி இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்தவிதத்திலும் நமது அயலுறவுக் கொள்கை சுதந்திரத்தையோ அல்லது அணு சக்தி உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான திட்டங்களையோ எந்தவிதத்திலும் நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்த முடியாது என்று உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் நிறைவேற்றலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அரசு வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர, ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்துவரும் இடதுசாரிகளின் சம்மதமும், ஒத்துழைப்பும் அவசியம் என்பதால் அவர்களை திருப்திபடுத்த இப்படியொரு தனிச் சட்டத்தை நிறைவேற்ற அரசு ஆலோசிப்பதாகவும், அதனை இடதுசாரிகள் முன்மொழிய வேண்டும் என்று எதிர்பர்ப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே நடைமுறைக்கு கொண்டுவராவிட்டால், பிறகு மீண்டும் இருதரப்பு பேச்சு நடத்தியே புதிய ஒப்பந்தம் உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இப்படிப்பட்ட ஒரு வழியை அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்குள் அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவராவிட்டால், அடுத்து வரும் நிர்வாகத்தின் மூலம் அதனைச் செய்வது கடினமாகிவிடும் என்பதையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு ஆலோசித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil