இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இரு தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசிய இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட் இன்று அயலுறவுச் செயலர் ஷிவ்சங்கர் மேனனை சந்தித்துப் பேசினார்!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசின் நிலையை அறிந்துகொள்ள அமெரிக்க தூதர், அயலுறவுச் செயலரைச் சந்தித்தாகவும், ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசு காட்டிவரும் சுணக்கத்திற்கு அமெரிக்க அரசின் ஏமாற்றத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஒப்பந்தத்தை நிறைவேற்ற கருத்தொற்றுமை ஏற்படுத்தும் முயற்சியில் தமது அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் முதலில் அயலுறவு அமைச்சரையும், பின்பு அயலுறவு அமைச்சகத்தின் அமெரிக்கா தொடர்பான விவகாரங்களுக்கான இணை செயலரையும் சந்தித்துப் பேசிய அமெரிக்கத் தூர் மல்ஃபோர்ட், இன்ற அயலுறவுச் செயலரையும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.