ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் இன்று தென் ஆப்ரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார்!
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற 2 நாள் இப்சா மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். தென் ஆப்ரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் 5 நாள் பயணமாக கடந்த 12 ஆம் தேதி சென்ற பிரதமர் 13 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நைஜீரியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் தென் ஆப்ரிக்காவில் உள்ள பிரிட்டோரியாவில் நடைபெற்ற பிரேசில், தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாகக் கொண்ட இப்சா அமைப்பின் 2வது மாநாட்டில் கலந்துகொண்டார்.
இம்மாநாட்டில் தென் ஆப்ரிக்க அதிபர் தபோ மெபக்சி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இன்னோசியோ லுலா-டா-சில்வா மற்றும் மூன்று நாடுகளிள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் 3 நாடுகளும் இணைந்து பணியாற்றுவது, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவது, தவிர தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மூன்று நாடுகளும் இணைந்து ஒரு கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளன. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு இன்றும் ஆழமாகவும், அதே நேரத்தில் வலிமைப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளதாக அந்த பிரகடனம் கூறுகின்றது.
தனது 5 நாள் பயணத்தின் போது பிரேசில், நைஜீரியா மற்றும் தென் ஆப்ரிக்கா உடனான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்தினார்.
இம்மாநாட்டிற்கு முன்னதாக பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. கல்வியாளர்கள், வணிகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் அமைப்பு என பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 3 நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களும் இடம் பெற்றிருந்தனர்.
மூன்று வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த உலகின் ஜனநாயக நாடுகளான பிரேசில், தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா இந்த இப்சா அமைப்பின் உறுப்பினர்கள் என்பதோடு மூன்று வளரும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் இணைந்து ஒத்துழைப்புடன் செயல்படுவது மற்றும் வெப்பநிலை மாற்றம், ஐ.நா. மறுசீரமைப்பு, உலக வர்த்தக அமைப்புடனான பேச்சுவார்த்தை, ஆக்கப்பூர்வ பணிகளுக்கு அணு சக்தியைப் பயன்படுத்துவது, மேலும் மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்குவதுடன் வளர்ச்சியை தடுத்து வறுமையை உருவாக்கும் தீவிரவாதத்தை தடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளால் ஒருங்கிணைந்து செயல்பட இப்சா நாடுகள் முடிவெடுத்துஐள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 3 நாடுகளிடையே வரும் 2012க்குள் நடைபெறும் வர்த்தகத்தின் அளவை 30 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.