கொலை வழக்கில், கொல்லப்பட்டவரின் உறவினர்கள் அளிக்கும் சாட்சியங்களை அவர்கள் உறவினர்கள் என்பதற்காகவே நிராகரிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!
மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹாம்பூர் கிராமத்தில் 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி பாபு லால் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். தனது நிலத்தில் இருந்த மரங்களை மற்றவர்கள் வெட்டியதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் போது, அவர்கள் நிலத்தில் அத்துமீறி வெட்டியர்கள் பாபு லாலை அரிவாளால் வெட்டினர். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது மனைவி ரெய்னா பாயும், மற்றொரு உறவினரான கியான் பாயும் காயமுற்றனர்.
இந்தக் கொலை வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச மாநில அமர்வு நீதிமன்றம், இறக்கும் தருவாயில் பாபு லால் அளித்த மரண வாக்குமூலத்தையும், ரெய்னா பாயும் மேலும் இருவர் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதனை எதிர்த்து மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில், தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், உயிரிழந்தவரின் உறவினர்கள் அளிக்கும் சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும், தண்டிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சியளித்தவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது என்றும் வாதிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. நெளலேக்கர், அல்டாமாஸ் கபீர் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, "ஒரு கொலை வழக்கில் அதனை நேரில் பார்த்த சாட்சிகள் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் என்பதற்காக அவர்கள் அளிக்கும் சாட்சியங்களை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கொலை நடந்த நேரத்தில் அவர்கள் அங்கிருந்த நேரடி சாட்சிகள் என்பதால் அவர்களின் வாக்குமூலம் ஏற்கத்தக்கதே" என்று தீர்ப்பளித்து, அமர்வு நீதிமன்றமும், ம.பி. உயர் நீதிமன்றமும் 2 பேருக்கு அளித்த தண்டனைகளை உறுதி செய்தனர்.
இக்கொலை வழக்கில், கொலையாளிகள் தவிர ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை நீதிமன்றக் குழு விடுவித்தது.