விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவில்லை என்றால் மத்திய அரசிற்கு அளித்துவரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், ''அணுசக்தி ஒப்பந்தம் வேண்டுமானால் கைவிடப்பட்டு இருக்கலாம். ஆனால் அரசிற்கு உள்ள ஆபத்து அப்படியேதான் உள்ளது. உயர்ந்து வரும் விலைவாசி சாதாரண மக்களை அதிகமாகப் பாதிக்கிறது. இந்த விசயத்தில் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மத்திய அரசிற்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படும்'' என்றார்.
மேலும், ''பொது விநியோகமுறையை வலுப்படுத்தி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்று உறுதி கூறப்பட்டுள்ள குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எங்களின் ஆதரவு அமைந்துள்ளது. ஆனால் அத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படாத நிலைதான் உள்ளது'' என்றும் பரதன் தெரிவித்தார்.
விவசாயத்தில் சில்லரை விற்பனை முறையில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவது பற்றிக் குறிப்பிட்ட பரதன், '' இம்முறையினால் சில உழவர்கள் வேண்டுமானால் பயனடையலாம், ஆனால் எல்லோருக்கும் அது அவமானம்'' என்றார்.
தேசியச் செயலாளர் டி.ராஜா பேசுகையில், '' பேச்சளவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறிய மத்திய அரசு, நடைமுறையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை'' என்று குற்றம்சாற்றினார்.