நமது கிராமத்துப் பெண்கள் இனி ராட்டையில் நூற்றபடியே தங்களுக்குத் தேவையான மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். இத்திட்டத்தை நவம்பர் 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பெங்களூருவில் துவக்கி வைக்கிறார்.
நூற்கும் விசையைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்காகச் சாதாரண ராட்டையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
'இ-சக்ரா' என்றழைப்படும் இந்த ராட்டையின் சக்கரத்துடன் மின்னாக்கி பொறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மின்னாக்கிக்கு தேவையான மின்சாரம் தருவதற்காக சிறிய புதுப்பிக்கத்தக்க மின்கலன்களும் உள்ளன.
இதன் மூலம் 4 மணி நேரம் ராட்டையைச் சுற்றினால், வானொலி, LED விளக்கு ஆகியவற்றை 7 மணி நேரத்திற்கும் மேல் இயக்கத் தேவையான மின்சாரம் கிடைக்கும். மின்கலன்களும் புதுப்பிக்கப்படும்.
பெங்களூருவைச் சேர்ந்த விஞ்ஞானி ஹைர்மாத், காதி மற்றும் கிராமத் தொழில்கள் நிறுவனம் (KVIC) ஆகியோர் இணைந்து இந்த நவீன ராட்டையை உருவாக்கியுள்ளனர்.
இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கப்பட்டு உள்ள இந்த ராட்டையின் விலை ரூ.3000 ஆகும்.
ஆனால் கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு மானிய விலையிலும், இலவசமாகவும் ராட்டைகள் வழங்கப்படவுள்ளன.
ராட்டைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக ஃப்ளெக்சிட்ரான் என்ற நிறுவனத்துடன் கிராமத் தொழில்கள் நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது.
''கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ள மின்னாக்கி சிறிது கூட கார்பன் டை ஆக்சைடை வெளியிடாது. எனவே சுற்றுச் சூழலுக்கு இது மிகவும் உகந்ததாகும்.
கிராமங்களின் சுற்றுச் சூழலை இந்த நவீன ராட்டைகள் பாதுகாக்கும்'' என்று ஹைர்மாத் கூறியுள்ளார்.
இவர் ஏற்கெனவே இரண்டுமுறை தனது கண்டுபிடிப்புகளுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
நமது நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் தினசரி உணவிற்கு ராட்டையை நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.