குஜராத் மாநிலத்தில் உள்ள பவாகத் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலியானார்கள். மேலும் பல பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் பவாகத் மலை கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மகாகாளி கோயிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் நவராத்திரி விழாவுக்கு இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கிக் கொண்டனர்.
மலையிலிருந்து இறங்கி வரும் பக்தர்கள் நடுவே மேலே செல்லும் பக்தர்கள் இடையே இந்த நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மலைப்பகுதியில் உள்ள பத்தியாபுல் என்னும் மிகவும் குறுகலான இடத்தில் இந்த நெரிசல் உண்டானது.
இதில் 12 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். குஜராத் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு இந்த சம்பவம் தொடர்பாக உதவுமாறு மத்திய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.