நமது நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பயங்கரவாதத்திற்கு சுமார் 71,000 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய புலனாய்வுக் கழக (CBI) அதிகாரி சாய் மனோகர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 'இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு' என்ற தலைப்பில் இந்திய பொது நிர்வாகக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கவும், பொது மக்களின் உயிர், சொத்துக்களுக்கு பெருமளவில் சேதம் விளைவிக்கவும் பயங்கரவாதிகள் விரும்புகின்றனர். எனவே பொது இடங்கள், மத வழிபாட்டுக் கூடங்களை அவர்கள் குறிவைக்கிறார்கள். நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குச் சவால் விடுகின்றனர்.
பயங்கரவாதத்தினால் கடந்த ஆண்டு 2,765 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 3,236 பேர் பலியாகினர். நாட்டில் உள்ள 608 மாவட்டங்களில் 231 மாவட்டங்கள் தீவிரவாதத்தாலும், பயங்கரவாதத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இடதுசாரி பயங்கரவாதத்தால் 27 விழுக்காட்டினரும், வடகிழக்கு தீவிரவாதத்தால் 23 விழுக்காட்டினரும், ஜம்மு காஷ்மீரில் 41 விழுக்காட்டினரும் இறந்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் வன்முறையில் 742 பேர் பலியாகினர். இதில் 266பேர் பொதுமக்கள், 128 பேர் பாதுகாப்புப் படையினர், 348 பேர் மாவோயிஸ்டுகள்.
தற்போது போருக்கு மாற்றாக பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இது முக்கிய இடங்களுக்கும், வணிக மையங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் மறைமுகப் போராக உள்ளது. அமைதியான பகுதிகளில் மதக் கலவரங்களைத் தூண்டவும் இந்தப் போர் பயன்படுத்தப்படுகிறது என்று சாய் மனோகர் மேலும் தெரிவித்தார்.